உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தமிழ் பேசும் உலகின் இஸ்லாமிய சிந்தனை அணியில் குறிப்பிடத்தக்க ஒருவர். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமைப் பொறுப்பை 1994 ஆம் ஆண்டு முதல் வகித்து வருகிறார்.

1960 ஆம் ஆண்டு நாவலப்பிட்டியவில் பிறந்த இவர் சாதாரண தரம் வரையிலான கல்வியை நாவலப்பிட்டி சென் மேரிஸ் பாடசாலையில் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு தனது உறவினரான உவைஸ் ஆலிம் என்பவரின் முயற்சியினாலும் வழிகாட்டுதல்களினாலும் பேருவலை ஜாமிஆ நளிமிய்யாவில் இணைந்து கொண்டார்.

1987 ஆம் ஆண்டு மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் விரிவுரையாளராகவும் பின் அதன் அதிபராகவும் பணியாற்றிய உஸ்தாத் அவர்கள் 1989 ஆம் காலப்பிரிவில் ஜமாஅத்தின் வடமேற்குப் பிராந்திய நாஸிமாகவும் 1988 ஆம் ஆண்டு முதல் மஜ்லிஸ் ஷுரா உருப்பினராகவும் செயற்பாட்டார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமைப்பு ரீதியான நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவர் ஆற்றும் உரைகளும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களும், அதேபோன்று அல்ஹஸனாத் மாத இதழில் எழுதிவரும் தஃவா களம் தொடரும் குறிப்பாக அவரது எளிய நடை காரணமாக பவ்வேறு தளங்களில் கருத்துத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே போல் இஸ்லாமிய சிந்தனைத் தெளிவை வழங்கும் வகைகளில் நூல்களையும் எழுதியுள்ளார். அவையாவன:

  1. பாதை தெளிவானது பயணிக்க யார் தயார்?
  2. அழைப்பின் நிலம் – பகுதி 1
  3. அழைப்பின் நிலம் – பகுதி 2
  4. நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு
  5. சுபீட்சமான வாழ்வை நோக்கி…
  6. இருள் தசாப்தத்தில் ஒர் அருள் தேசம் பலஸ்தீன்
  7. ஆழிப் பேரலையின் அடியினிலே…!
  8. பெண் நீதமும் நிதர்சனமும்
  9. தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்

அவரது எழுத்துக்களிலும் விடயங்களை அணுகும் விதத்திலும், தீர்வுகள் முன்மொழியும் தொனியிலும் இழையோடும் தீனை நிலைநாட்டும் பணியில்தான் தீர்வு என்கின்ற அடிப்படை அம்சம் சிலோகித்து குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.