பாதை தெளிவானது பயணிக்க யார் தயார்?

பாதை தெளிவானது பயணிக்க யார் தயார்?

இது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் நிகழ்த்திய ஓர் உரையின் தொகுப்பு. இந்த உரை அக்குரணை ஜமாஅத்தே இஸ்லாமி பயிற்சி மன்றம், 1996 ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் ஒன்றில் நிகழ்த்தப்பட்டது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது என்பதை இந்த உரை தெளிவுபடுத்துகிறது. அத்துடன் உலக முஸ்லீம்களையும் தொட்டு செல்கிறது.

அல்லாஹ் கைர உம்மத் – மிகச்சிறந்த சமுதாயம் என முஸ்லிம்களை வர்ணிக்கின்றான். அத்தகைய வர்ணனைக்குரிய சமூகமாக இந்த முஸ்லிம் சமூகம் நடந்து கொள்கிறதா என்பதை அவர் தனக்கே உரிய இயல்பான நடையில் விபரித்துக் கொண்டு போகிறார்.

காலமெல்லாம் புகழாரங்களையே கேட்டுப் பழகிவிட்ட சிலருக்கு இவர் தம் கருத்தை முன்வைக்கும் முறையில் சற்று மனம் நோகலாம்.ஆயினும் அவரது கருத்துக்களை மறுக்கவோ தூக்கி எறிந்து விடவோ துணிவு கொள்ள மாட்டார்.

காரணம் முஸ்லிம் சமூகம் அப்படி இருப்பதுதான்.!

அதனால் அவருக்கு ஏற்பட்ட மனநோவு அத்தகைய சொற்களாக வெளியே வந்துள்ளது.
அவர் தற்போது முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவதுடன் அல்லது குறை கூறுவதுடன் நின்றுவிடவில்லை.

அதற்கான பரிகாரங்களையும் தருகின்றார். அந்தப் பரிகாரங்களை மூன்று தலைப்புக்களில் நோக்கலாம்.

முஸலிம்களின் பேதம் கடந்த ஒற்றுமை

நன்மைகளை ஏவுவதுடன் மட்டும் நில்லாது தீமைகளையும் ஆணி வேருடன் பிடுங்கி ஏறிதல்.
முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய வழிவந்த தலைமைத்துவத்தைக் கொண்டு வரல்.

வாசகர்கள் இந்த உரைத் தொகுப்பை ஒரு முறைக்கு இருமுறை படித்து இதன் வழியில் சிந்தனையை ஓடவிட்டால் அவரது கருத்துக்களுடன் ஒன்றித்து விடுவர் என்பதில் ஐயமில்லை. அடுத்து அவரது அழைப்பை ஏற்று பணியில் இறங்குவதுதான் பாக்கி. எல்லோரும் தயாராகுவோமா?

எஸ்.எம் மன்சூர்
மாத்தளை
15-10-1997