ஆழிப்பேரலையின் அடியினிலே...

ஆழிப்பேரலையின் அடியினிலே…

இவர்களில் யாரை நீங்கள் அதிகம் பயப்படுவீர்கள் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவர்: திடகாத்திரமான தேகம், வாட்டசாட்டமான தோற்றம், எவருக்கும் அஞ்சாத அலட்சியப் பேச்சு, உங்கள்மீது தீராத கோபமும் பகையும்.

மற்றவர்: வீரமும், விவேகமும் கொண்டவர். அறிவும் நல்ல பண்புகளும் நிறைந்தவர், தாராள மனமுடையவர், உங்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர்.

நெஞ்சில் நிறைந்த மரியாதையோடு கூடிய பயம் இரண்டாமவரிடத்தில் தானே இருக்கும். முதலாமவரைக் காணும் போது சிலவேளை அவரைப்பற்றிய ஒரு அச்சம் வரலாம். எனினும், அவர் மறைந்துவிட்டால் எங்களது மனம் அவருக்கு அஞ்சாது. இரண்டாவது மனிதர் அவ்வாறல்ல. அவர் எங்களது கண்களை விட்டு மறைந்தாலும் அவரை நினைக்கும்போது ஒரு மகத்ததுவப் பயம் அவர் விடயத்தில் வரத்தான் செய்யும்.

இந்த உதாரணத்தை மனதில் வைத்துக் கொண்டு சற்று அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம். அல்லாஹ்வை நாங்கள் பயந்து வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்று. அந்த அடிப்படை ஒரு நல்லுபதேசமாக எப்போதும் எங்களுக்கு போதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்தப் பயம் எதனை ஒத்ததாக இருக்க வேண்டும்? மேலே குறிப்பிட்ட முதலாவது மனிதன் மீது கொண்ட பயத்தையா? இரண்டாவது மனிதன் மீது கொண்ட பயத்தையா?

முதலாவது வகை பயத்தை ஒத்ததாக இருக்க வேண்டும் என எந்த முஸ்லிமும் கூறமாட்டானல்லவா? காரணம் அது அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காகின்ற பயம். அத்தகைய பயம் நீடிக்காது, நிலைக்காது.

இரண்டாவது பயம் அவ்வாறல்ல. அது அன்பும் மரியாதையும் கலந்த பயம். அதன் ஆயுள் நீண்டது.
எனினும் அதனை விட நீண்டது ஒரு அடியான் அல்லாஹ்வின் மீது கொண்டிருக்கும் பயம். காரணம் உலகில் எத்துணை மரியாதை கலந்த பயத்தோடு ஒரு மனிதனைப் பார்த்தாலும் நாம் அவரை எங்களது எஜமானாக ஏற்பதில்லை. அதாவது அவரை வணங்கி வழிப்படுவதில்லை. அவர் மீது கொண்ட அந்த மகத்துவம் பயம் அவரை வணங்குமாறு எங்களைத் தூண்டுவதில்லை.

அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் அவன்மீது நாங்கள் கொண்டிருக்கும் மரியாதை, மகத்துவம், மகோன்னதம் என்பவற்றுடனான பயம் அவனை வணங்கி வழிபட எம்மைத் தூண்டுகிறது.

இத்தகைய அன்பு கலந்த அடிமைத்துவப் பயம்தான் அல்லாஹ்வின்மீது அடியானுக்கு ஏற்பட வேண்டிய பயமாகும். அல்லாமல் ஏதோ அழிக்கிறான், சவால் விடுகிறான், தவிடுபொடியாக்குகிறான் என்ற உணர்வில் வருகின்ற பயமல்ல. இது ஒரு பாதாள உலக மனிதனுக்கோ, புலி அல்லது சிங்கம் போன்ற கொடிய மிருகத்துக்கோ பயப்படுவது போன்றதாகும்.

அல்லாஹ்வைப் பற்றி இத்தகைய ஒரு பயத்தைத்தான் சிறுவயதிலிருந்தே நாம் எமது பிள்ளைகளுக்கு ஊட்டி வருகின்றோம். தந்தை அல்லது தாய் மகனைப் பார்த்து கூறுவார்: ‘பொய் சொல்லாதே அல்லாஹ் சுடுவான்!’ இது பிள்ளைகளுக்கு பெற்றோர் ஏற்படுத்துகின்ற அல்லாஹ் பற்றிய அச்சமாகும்.

இதே பாணியில்தான் பெரியவர்களுக்குக் இப்போது சுனாமியைக் காட்டிப் பயமூட்டும் வேலையை நாம் செய்கிறோம். ‘அல்லாஹ் சுடுவான்’ என்று கூறியதுபோல் ‘அல்லாஹ் சுனாமியை அனுப்புவான்’ என்று பெரியவர்களுக்குக் கூறுகிறோம்.

அல்லஹ்வைப் பற்றி பல மகத்துவப் பயம் ஏற்படுவதற்கு நாம் வழிசெய்யாமல் உறுமுகின்ற ஒரு சிங்கத்தை, ஒரு புலியைக் காட்டிப் பயமுறுத்துவது போல அல்லாஹ் மீதான பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.

அதனால்தான் அழிவு பற்றி குர்ஆனும் சுன்னாவும் என்ன கூறுகின்றன? எல்லாம் அவன் செயலே என்ற வகையில் சுனாமியும் அவன் செயல்தான். எனினும் அதனை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? சுனாமி சுமந்து வந்த படிப்பனைகள் எவை? அழிவின் பின்னால் எத்தகைய பொறுப்புக்களையும்அருள்களையும் அல்லாஹ் வைத்திருக்கிறான்? போன்ற அம்சங்களின் பால் மக்களின் கவனத்தைத் திருப்புவோம் என்று மனம் நாடியது.

அந்த நாட்டம் கட்டுரை வடிவங்களாக மாறி இப்போது ஒரு நூல் வடிவத்தைப் பெற்றுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.