அழைப்பின் நிலம் - 01

அழைப்பின் நிலம்

அல்குர்ஆனை ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிமேல் அடிவைத்துச் சென்ற பாதையை ஒரு முறை நோட்டமிட வேண்டும். குர்ஆன் தந்த மாமனிதரை நகர்த்திச் சென்ற வரலாறு – ஸீராவை ஒருமுறை சிந்தனையோடு அணுக வேண்டும்.

அப்போது சராசரி அறிவுள்ள ஒரு சாதாரண மனிதன் கூட தனது உடம்பில் புதிய இரத்தம் பாய்ச்சுவது போன்ற உணர்வை பெறுவான்.

தனது இதயத்தில் ஓர் இலட்சிய துடிப்பு உருவாகி உத்வேகம் தருவதாகக் காண்பான்.
காலடியில் கடமைகளும் பொறுப்புக்களும் நிறைந்திருக்க அகப்பார்வையில்… தொலை தூரத்தில்… எல்லையில்லாத ஒருவகை ஆனந்தம் நர்த்தனம் புரிவதையும் அதனால் மன அமைதி பெற்றுத் தனது பொறுப்புக்களில் உள்ளார்ந்த ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிப்பதையும் அவன் கண்டு கொள்வான்.

இது குர்ஆன் குர்ஆனிய மானிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கையும் ஒரு மனிதனிடம் உருவாக்கவல்ல மாற்றங்களாகும்.
இதயசுத்தியோடு இத்தகைய மாற்றங்களைக் காண அவாவுறும் அநேகர் எம்மத்தியில் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இத்தகைய மாற்றங்களுக்கு பல்வேறு அளவுகளில் தம்மை உட்படுத்தியும் இருக்கலாம்.

மாற்றங்கள் கண்டவர்களாயினும் சரி, காண்பதற்கு அவாவுறுபவர்களாயினும் சரி அனைவரும் ஒரு விடயத்தில் உடன்படுவார்கள் என்று கூறலாம்.

அதுதான் அந்த மாற்றங்களை தருகின்ற பாதையும் பயணமுமாகும்.

நபிகளாரின் பாதையில்… அவர்கள் சென்ற பயணத்தில்… அவர்கள் முன்னோக்கியிருந்த இலக்குகளில்… எமது கவனத்தையும் பாதத்தையும் பதிக்காமல் நாம் இத்தகைய மாற்றங்களை காண முடியாது.

அந்தப் பாதை எது?

எங்கிருந்து அது ஆரம்பிக்கிறது?

அதில் எமக்குள் பொறுப்புக்களும் கடமைகளும் எவை?

உலகிலும் மறுமையிலும் அந்தப் பாதை கொண்டிருக்கும் இலக்குகள் எவை?

அந்தப் பாதையில் செல்ல விரும்புபவர்கள் அறிந்தோ அறியாமலோ எந்த இடங்களில் சறுக்கி விடுகிறார்கள்?

போன்ற வினாக்கள் இஸ்லாத்தின் பாதையில் பயணம் செய்ய விரும்புவர்கள் ஆழந்து சிந்திக்க வேண்டியவையாகும்.

இந்தக் கேள்விகளுக்கு விரிவான, தெளிவான பதில்களை இன்றைய நடைமுறைகளோடும் பிரச்சினைகளோடும் தொடர்புபடுத்தி விளக்குவது என்பது ஒரு சாதாரண விடயமல்ல. ஒரு அறிஞர் குழு தன்னை முழுமையாக அர்பணித்துச் செய்ய வேண்டிய ஒரு பணி அது. அதனை செய்தவர்களுமிருக்கிறார்கள், செய்து கொண்டுமிருக்கிறார்கள்.

அந்தப் பணி பற்றிய சில சிந்தனைத் துளிகளையே இந்த ஏடு கொண்டிருக்கிறது.