அழைப்பின் நிலம் 2

அழைப்பின் நிலம்

“அழைப்பின் நிலம்” இரண்டாவது தொகுப்பு நூல் வடிவம் பெற்றிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டிருக்கும் தாஇகளைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது எழுதப்பட்ட அழைப்பியல் சிந்தனைகளே இத்தொகுப்பாகும்.

தஃவாகளம் ஒரு பயிர் நிலம். அங்கு இஸ்லாம் என்ற பயிரை நட்டு வளர்க்கும் விவசாயிகளே தாஇகள். இந்த தாஇகளது பயிர்ச்செய்கை சிறந்த விளைச்சலைத் தர வேண்டும். அவர்களது முயற்சிகளும் சிரமங்களும் விரயமாகிவிடாதிருக்க வேண்டும். பயிர் நிலத்தை பயிருக்குப் பொருத்தமற்றதாக அவர்கள் மாற்றி விடாதிருக்க வேண்டும். அவர்கள் ஊன்றும் விதைகள் பழுதற்ற விதைகளாக இருக்க வேண்டும் பதர்களாக இருந்துவிடக் கூடாது.

இந்த நோக்கங்களை அடையும் பாதையில் பிரச்சினைகள் பல. ஒரு தாஇ தான் பேச நினைப்பதைப் பேசி விட்டுச் செல்வதனால் இஸ்லாம் என்ற பயிருக்கு அவசியமான அனைத்து சௌகரியங்களும் தானாக அமைந்துவிடப் போவதில்லை. தாஇகள் தாம் நட்டு வளர்க்க விரும்பும் பயிரைப் பற்றியும் தன் வளர்ச்சி வீழ்ச்சிக்கான காரணங்கள் பற்றியும் தன் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் சூழல் பற்றியும் அறியாமல் தஃவா களத்தில் பிரவேசிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் பயிரை வளர்க்கிறோம் என்ற நல்லெண்ணத்தில் தன் வளர்ச்சியை பல தசாப்தங்கள் பின்தள்ளி விடுவார்கள்.

இன்று இஸ்லாத்திற்கு ஏற்பட்டிருக்கும் கவலைக்கிடமான நிலையை களத்தில் காணும்போதெல்லாம் உள்ளம் வேதனைப்படுகிறது. இஸ்லாம் என்ற பயிர் தன் காவலர்களாலேயே வளர்ச்சி பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாவதை சகித்துக் கொள்ள முடியாதிருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களையும் நிகழ்வுகளையும் களத்தில் அவதானிக்கும்போது சம்பந்தப்படும் மனிதர்களைக் குறை கூறாமல், பிழைகளை சரி செய்வதற்கும் பயிர் ஊட்டச் சத்தைப் பெறுவதற்கும் அவ்வப்போது தேவைப்படும் வழிகாட்டல்கள் சிலவற்றை களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டியேற்படுகிறது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டவற்றிலிருந்து தொகுக்கப் பட்ட சில ஆக்கங்கள்தான் இரண்டாம் பாகமாக இப்போது வெளிவருகிறது.

இவ்வாக்கங்களுக்கான “கரு” க்களை அல்லாஹ்வின் மார்க்கம் அள்ளி அள்ளித் தருகின்றது. “கரு” க்களின் கர்த்தாவாகிய அல்லாஹ்வுக்கே புகழ அனைத்தும்! நிறைகள் அனைத்தும் அவனைச் சார்ந்தவை குறைகள் இருப்பின் என்னைச் சாரும். அவற்றை அவன் மன்னித்து அருள்புரிய வேண்டும். களத்தின் அன்பர்களும் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆக்கங்களைத் திரட்டி, திருத்தி, நூல் வடிவம் பெறச் செய்த அல்ஹஸனாத் வெளியீட்டகப் பொறுப்பாளர்களுக்கும் அணிந்துரை வழங்கிய தமிழ்நாடு ஜமாத்தே இஸ்லாமியின் அமீர் ஷபீர் அஹ்மத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!

ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி
ஆகஸ்ட் 2012, ரமழான் 1433